My poems in Tamil — 2

Deepak S M
Apr 16, 2023

மனிதர் மலர்தல் வேண்டும்

மகத்துவம் படைத்தோர் மனிதருள் மலர்ந்தோர்.
இன்பமும் துன்பமும் அலையென உருவெடுக்கும்
வாழ்வின் அலையது ஆங்கே மலர்ச்சோலை கரைதொட வழிவகுக்கும்.
ஒவ்வொரு மலரிலும் தேனுண்டு
அவை வெவ்வேறாயினும் சுவை ஒன்று.
கன்றது குடிக்கும் பால்போல
இவர் வாழ்வார் இளப்பொறிக்கு வித்தாக.
காலம் பதில் சொல்லக் காத்திருக்கும்
இவர் ஊடாக வந்தது காட்சிதரும்.
கற்பனைக் களத்தில் கலந்திருப்பார்
இவர் கண்ணசைத்தால் தேவி பாட்டிசைப்பாள்.
தன்னை மறந்து வெளிப்படுவார்
இவர் வெளியதிலே இறைவன் நடம்புரிவார்.
வறுமை வாட்டினும், புறவோர் ஏசினும்,
வையகம் வாழ இன்ப ஊற்றெடுக்கும்
இவரை வள்ளல் எனவே பெயரிடலாம்.
இவர் படைப்புகள் யாவும் வேறெனினும்
அவை உணர்த்தும் தெளிவை கீழ்காண்க:
“அரிதினும் அரிதான பிறப்பிதுவே
தன்னை மலர்த்தும் வழிகண்டு வாழ்வீரே!”

சுயநலம் ஒரு மூடத்தனம்

பயத்தால் உயிரை வளர்த்திருப்பார்
கனவிலும் தன்னை மட்டுமே நினைத்திருப்பார்
பங்கிடுவோரை பகைத்திருப்பார்
தனக்கே உயர்வை வேண்டிநிற்பார்
வெளியோர் அன்போடு இவரைப் பார்த்ததில்லை
பிரதியெண்ணாமல் இவரும் கொடுத்ததில்லை
என்றோ ஒருநாள் மனம் விரிந்து
இருப்பதை தருவார் உளமகிழ்ந்து
அதிசயம் கண்டு மழைப்பொழியும்
இவர் வாழும் குழிதேடி நன்றிசொல்லும்
மனிதம் இருந்தால் சிந்திப்பார், இவர் —
முறைமை இலா வாழ்வை நிந்திப்பார்
அரணென வெட்டிய குழிநின்று வெளிவருவார்
அறத்தின் ஒளிகொண்டு பார்த்திடுவார்
உயிர்களை அன்புக்கரத்தாலே அணைத்திடுவார்
நீயும் நானும் வேறில்லை
எனும் சத்திய வாக்கை விளங்கிடுவார்.

--

--

Deepak S M

Software Engineer. Math & Physics enthusiast. Dreaming of a survival-free world